இளம் வயதில் ஒன்றாகப் படித்தோம். பின்னர் நெருங்கிய நண்பர்களாக மாறினோம். இன்று 60 ஆண்டு கால நண்பரை இழந்து பெரும் துயரில் மூழ்கியிருக்கிறேன் என்று மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆ.வைத்திலிங்கம் கூறினார்.
நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும் மஇகா இளைஞரணி முன்னாள் தலைவருமான டத்தோ வி.எல்.காந்தன் காலமான செய்தி கேட்டு நான் பெரிதும் அதிர்ச்சியில் மூழ்கினேன்.
தற்போது நிலவும் மோசமான புகைமூட்டம் காரணமாக எனது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த முடியாமல் போய்விட்டது. ஆனாலும் அவரின் மகளை தொலைபேசியில் அழைத்து எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.
என் சார்பிலும் குடும்பத்தின் சார்பிலும் அஞ்சலி செலுத்துவதற்காக என் மகனை அனுப்பி வைத்தேன். டத்தோ காந்தனுக்கும் எனக்கும் உள்ள உறவு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. 1950ஆம் ஆண்டுகளில் நாங்கள் சிலாங்கூரில் கல்வி பயின்றபோது ஒருவருக்கொருவர் அறிமுகமானோம்.
அவர் அரசியலில் தீவிரம் காட்டினார். நான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய இந்து சங்கம் ஆகிய இந்து சமுதாய அமைப்புகளில் பணியாற்றத் தொடங்கினேன். சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக டத்தோ காந்தன் பதவியேற்றபோது சிலாங்கூர் மாநிலத்தில் நிலவிய கோவில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவரை நான் அடிக்கடி சந்தித்து பேச்சு நடத்தியிருக்கிறேன்.
1996 முதல் 2009ஆம் ஆண்டு வரையில் மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக நான் பதவி வகித்த காலத்தில் என்னுடைய அழைப்பை ஏற்று அவர் இந்து சங்கத்தின் கௌரவ சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இதற்காக அவர் சல்லிக்காசுகூட கட்டணமாக வாங்கியது கிடையாது. கோவில்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள், மத மாற்றச் சம்பவங்கள்
ஆகியவற்றின்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் பெரிதும் பாடுபட்டிருக்கிறார். அவரது சேவையை சமுதாயம் ஒருபோதும் மறந்துவிடாது என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
The post இனிய நண்பரை இழந்து வாடுகிறேன் டத்தோ காந்தன் காந்தன் மறைவுக்கு டத்தோ வைத்திலிங்கம் இரங்கல் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

