Last Updated:
13 ஆண்டுகள் முதலமைச்சர், தொடர்ந்து 3 முறை பிரதமர், 36 சர்வதேச விருதுகள் என அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமைத்திறனுக்கான முன்னுதாரணமாக திகழ்பவர் நரேந்திர மோடி.
கடந்த 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குஜராத் மாநிலம் வத்நகரில் எளிய பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் பிரதமர் மோடி. இளம் வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், சமூகப் பணிகளில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 1972 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்.-யில் தன்னை இணைத்துக் கொண்ட மோடி, பரப்புரை பணியைத் தொடங்கி பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
மனிதர்களை ஒருங்கிணைப்பது மற்றும் திறமையால் கவனம் பெற்ற மோடி, பாஜகவிலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பாஜகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற மோடி, அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக முதன் முறையாக வெற்றிக்கனியை ருசிக்க முக்கிய பங்காற்றினார்.
அதனை தொடர்ந்து, 1990-ல் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸிற்கு அடுத்த முக்கிய கட்சியாக பாஜக உருவெடுத்தது. 1995 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடிய நிலையில், அக்கட்சியின் தேசிய செயலாளராக மோடி நியமிக்கப்பட்டார்.
பின்னர் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பை வகித்த மோடி, 1998 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பெரும் உழைப்பை செலுத்தினார். இதற்கு கை மேல் பலன் கிடைத்ததை போன்று, 2001 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் அழைப்பை ஏற்று, குஜராத் மாநில முதலமைச்சராக மோடி பதவி ஏற்றார்.
அரசியல்வாதியாக இருந்த மோடி, ஆட்சி நிர்வாகத்தில் அடியெடுத்து வைத்தது அவரது வாழ்வின் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 13 ஆண்டுகள் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, 2014 மக்களவைத் தேர்தலில், பாஜகவின் தலைமை பிரசார முகமாக மாறினார். 2014 மக்களவைத் தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றதை தொடர்ந்து, நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார்..
அதன் பிறகு, 2019, 2024 என அடுத்தடுத்து 3 முறை பிரதமர் அரியணையில் அமர்ந்து அசைக்க முடியாத சக்தியாக மாறினார். நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு தொடர்ந்து 3 முறை பிரதமராக பொறுப்பேற்றவர் என்ற சாதனையும் மோடி வசம் சென்றது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும், இந்திய பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி தவிர்க்க முடியாத தலைவராக பரிணமித்தார்.
இதுவரை 82 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் சென்ற பிரதமர் மோடிக்கு 36 சர்வதேச விருதுகள் கிட்டியுள்ளன. இன்று தனது 76 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், உலக தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


