இந்த தீபாவளி நம்மளோடுது.. விலைவாசி உயர்ந்தாலும் கவலையில்லை..! இந்திய மக்களா இப்படி?
இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் சீசன் துவங்க உள்ளது தீபாவளி, நவராத்திரி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பெரிய பண்டிகை வரும் காலம் என்பதால், இந்த வருடம் வர்த்தக சந்தை எப்படியிருக்கும் என்பதற்கான முன்னோட்டம் ஓணம், ரக்ஷா பந்தன், விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் தெரிய வந்துள்ளது.
இந்த 3 பண்டிகை காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகப்படியாக மக்கள் ஷாப்பிங் செய்துள்ளதால் இந்த ஆண்டு தீபாவளி, நவராத்திரி, கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனை தாம்தூம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

ஆட்டோமொபைல் துறை
ஓணம், ரக்ஷா பந்தன், விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் அதிரடியான விற்பனை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் கார் ரீடைல் விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது, மாருதி சுசூகியின் விற்பனை 61 சவீதம் உயர்ந்துள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதைவிட முக்கியமாக மாருதி சுசூகி நிறுவனத்திடம் 1.8 லட்சம் கார்களுக்கான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. ஹூன்டாய் நிறுவனம் தனது தொழிற்சாலையில் 3வது ஷிப்ட் துவங்கும் யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டு உபயோக பொருட்கள்
கார் விற்பனை போலவே வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் ஆகியவற்றின் விற்பனை இந்த 3 பண்டிகை காலக்கட்டத்தில் 12 -15 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பெரிய டிவிகள், 4 கதவுகள் கொண்ட பிரிட்ஜ், பெரிய வடிவிலான வாஷிங் மெஷின் ஆகியவை அதிகம் விற்பனையாகியுள்ளதாக டார்க் தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பணவீக்கம் குறித்த கவலை இல்லையா..?
சர்வதேச சப்ளை செயின் பாதிப்பு, இறக்குமதி பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு என அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. உதாரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் கடந்த ஆண்டை காட்டிலும் இதன் விலை 12% முதல் 15% வரை உயர்ந்துள்ளது.
லேப்டாப், ஸ்மார்ட்போன்-களின் சராசரி விலை உயர்வு 35% முதல் 40% வரை உயர்ந்துள்ளது. கார் விலைகளும் சுமார் 3.5% முதல் 5% வரை அதிகரித்துள்ளன. ஆயினும் மக்கள் பொருட்களை அதிகளவில் வாங்கியுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு வாங்கப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் ஈஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக வாங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் குவிக் காமர்ஸ் தளத்திலும், 2ஆம், 3ஆம் நிலை நகரங்களிலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

