கோலாலம்பூர்:
மலேசியாவில் நிலவி வரும் கடுமையான புகைமூட்டம் மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வீடுகளில் மின்சாரப் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள திடீர் மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில், உடனடி நிவாரண நடவடிக்கைகளை ஆராய்வதற்காக மலேசிய அரசாங்கம் நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 17) சிறப்புக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் திடீரென உயர்ந்திருப்பது குறித்துப் பொதுமக்கள் தெரிவித்து வரும் நியாயமான கவலைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கான தங்களது அதிகாரபூர்வப் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும், மின்கட்டண உயர்வு தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் உடனடியாகத் தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகப் பிரதமர் கூறினார்.
“பொதுமக்களின் புகார்களை நான் கவனமாகக் கேட்டுள்ளேன். இந்த விவகாரத்திற்கு உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்” என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்கும் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மலேசிய அரசாங்கம் என்றும் முதன்மை முன்னுரிமை அளிக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் அன்வார், தகுதியானவர்களுக்குச் சென்றடையும் வகையிலான இலக்குமுறை மானியங்கள் மிகவும் நியாயமான முறையிலும் உகந்த வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுவதை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.



