Last Updated:
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் முறைப்படி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
வட அரபிக் கடலில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல், இந்தியப் போர்க்கப்பல் மீது ஆபத்தான முறையில் மோதிய சம்பவம் இரு நாடுகளிடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலையில், வட அரபிக் கடலில் குவாடார் (Gwadar) அருகே வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியப் போர்க்கப்பல்கள் மீது, பாகிஸ்தான் கடற்படையின் ‘பி.என்.எஸ் ஹுனைன்’ (PNS Hunain – F-273) என்ற சிறிய ரகக் கப்பல் அதிவேகமாக வந்து மோதியது. பாகிஸ்தான் நடத்திய கடற்படைப் பயிற்சியை இந்தியப் போர்க்கப்பல்கள் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தானியக் கப்பல் பாதுகாப்பற்ற முறையில் அதிவேகமாக வந்து மோத முயன்றதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதைத் தொடர்ந்து இந்தியக் கடற்படை வீரர்கள் உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்டுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் இந்தியப் போர்க்கப்பலுக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், மோதியதில் பாகிஸ்தானின் பி.என்.எஸ் ஹுனைன் கப்பல் சேதமடைந்து, அங்கிருந்து கராச்சி துறைமுகத்திற்குத் திரும்பிச் சென்றது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் முதன்மை தூதரகப் பிரதிநிதிக்கு (Charge d’Affaires) இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாகச் சம்மன் அனுப்பித் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்தது. அதேபோல், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் முறைப்படி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
1991-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ‘ராணுவப் பயிற்சிகள் மற்றும் படைகளின் நகர்வுகள் தொடர்பான முன்அறிவிப்பு ஒப்பந்தத்தின்’ பிரிவு 10-ஐ (Article 10) பாகிஸ்தான் கப்பலின் இந்த செயல் நேரடியாக மீறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, சர்வதேசக் கடற்படை விதிகள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை பாகிஸ்தான் ராணுவம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேற்கு ஆசியா மற்றும் செங்கடல் பகுதியில் நிலவும் சர்வதேசப் பதற்றங்களுக்கு இடையே, பாகிஸ்தான் அரபிக் கடலில் மேற்கொண்ட ‘கரார்’ (Karrar) மற்றும் ‘அபாபீல்’ (Ababeel) ஆகிய கடற்படைப் பயிற்சிகளின்போது இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


