கோலாலம்பூர்:
குளுவாங் நகரில் அதிகாலை வேளையில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபரின் வாகனத்தைத் துரத்திச் சென்றபோது, காவல் துறை அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.
இன்று அதிகாலை 5.54 மணியளவில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு காவல் துறை அதிகாரிகள், கேபிள் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற மிட்சுபிஷி பிக்கப் டிரக் வாகனத்தைக் கண்டு அதனைத் துரத்தியதாகக் குளுவாங் துணைப் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டெண்ட் நிக் முகமட் அஸ்மி ஹுசின் தெரிவித்தார்.
அந்த வாகனத்தின் பின்புறத்தில் வெட்டப்படாத தொலைத்தொடர்புக் கேபிள்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையைக் கண்டதும் சந்தேக நபர் காரை வேகமாகச் செலுத்தித் தப்பியோட முயன்றுள்ளார்.
“சம்பவ இடத்திலிருந்து தப்பிய சந்தேக நபரின் வாகனத்தைப் பின்தொடர்ந்து இரு அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றனர். இந்த அதிவேக விரட்டலின் போது எதிர்பாராதவிதமாக ஒரு அதிகாரி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார்” என்று சுப்ரிண்டெண்டெண்ட் நிக் முகமட் அஸ்மி ஹுசின் கூறினார்.
குளுவாங் நகரில் காவல் துறை மோட்டார் சைக்கிள்கள் சிவப்பு நிற மிட்சுபிஷி காரைத் துரத்தும் வீடியோ ‘Threads’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, காவல் துறை இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரையோ அல்லது அந்த வாகனத்தையோ கண்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது குளுவாங் மாவட்டக் காவல் தலைமையகத்திலோ தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சம்பவம் குறித்துத் திருட்டுச் சட்டப் பிரிவு 379 மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் குறித்த குற்றவியல் சட்டப் பிரிவு 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



