Tamilnadu
oi-Nantha Kumar R
திருப்பத்தூர்: ”சேகர்பாபு, முதல்வரை பற்றி கொஞ்சம் அதிகமாக பேசினால், அவருக்கு தகுந்த நேரத்தில் தக்க பாடம் புகட்டப்படும். தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெறுவோம். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று திமுகவினருக்கு பதிலடி கொடுப்போம்” என வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் ஆவேசமாக பேசினார்.

திருப்பத்தூரை அடுத்த ஆதியூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் தவெக எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட செயலாளருமான திருப்பதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்து கொண்டார். இதில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரஞ்சித் குமார் கடுமையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”சேகர்பாபு, முதல்வரை பற்றி கொஞ்சம் அதிகமாக பேசினால், அவருக்கு தகுந்த நேரத்தில் தக்க பாடம் புகட்டப்படும்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெறுவோம். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று திமுகவினருக்கு பதிலடி கொடுப்போம்” என்று கொந்தளித்தார்.
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் விஜய் பற்றி பேசியது சர்ச்சையானது. சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் பற்றி தற்போதைய முதல்வர் விஜய் பேசியது விவாதமானது. இதனை கண்டித்து திமுகவினர் கடந்த 12ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை ஆர்ப்பாட்டத்தில் சேகர்பாடு, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமாரை ஆபாசமாக பேசினார். இதுதொடர்பாக சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் உரிய நேரத்தில் தக்க பாடம் கற்பிக்கப்படும் என்று வார்னிங் செய்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர் ரஞ்சித் குமார் பேசுகையில், ”தமிழக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற 100 நாள் சாதனை விளக்க நிகழ்வில் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சினிமா துறையில் உச்சத்தில் இல்லாத காலகட்டத்தில்தான் பலர் அரசியலுக்கு வருவார்கள். ஆனால், தமிழக முதல்வர் விஜய் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தபோதே அரசியலுக்கு வந்தவர். இரண்டரை ஆண்டுகள் கட்சியை நடத்தி, எம்.எல்.ஏ.வாக இல்லாமலேயே நேரடியாக மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளவர்கள் எந்தவித பாகுபாடுமின்றி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
நான் ஜெயலலிதா ஆட்சியில் அதிமுகவில் இருந்தவன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் எந்தப் பக்கம் செல்வது என தெரியாமல் இருந்தபோது, விஜய் அவர்களை நோக்கி சென்றேன். அதன் காரணமாக இன்று என்னை எம்.எல்.ஏ.வாகவும், வனத்துறை அமைச்சராகவும் உயர்த்தியுள்ளார். அதேபோல், உங்களுக்கும் எதிர்காலத்தில் உயர்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். நீங்களும் அரசியலில் உச்சத்தைத் தொடுவீர்கள்” என்றார்.

