Last Updated:
2004 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமான 40 வயதான பிரெண்டன் டெய்லர், ஜிம்பாப்வே அணியின் மிகச் சிறந்த பேட்டர்களில் ஒருவராக உருவெடுத்தார்
ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் பிரெண்டன் டெய்லர் (Brendan Taylor), இந்தியக் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
பிரெண்டன் டெய்லரின் ஒருநாள் கிரிக்கெட் கெரியர் தற்போது 22 ஆண்டுகள் மற்றும் 148 நாட்களை எட்டியுள்ளது. இதன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் 22 ஆண்டுகள் மற்றும் 91 நாட்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ஹராரேவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் களம் இறங்கியபோது டெய்லர் இந்த சாதனையைப் படைத்தார்.
இச்சாதனையால் சச்சின் டெண்டுல்கர் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா (21 ஆண்டுகள் 184 நாட்கள்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
டெய்லர் இந்தச் சாதனையை முறியடித்த போதிலும், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (18,426 ரன்கள்) மற்றும் அதிக போட்டிகளில் விளையாடியவர் (463 போட்டிகள்) என்ற சச்சின் டெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைகள் இன்னமும் தகர்க்கப்படாமல் முதலிடத்திலேயே உள்ளன.
2004 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமான 40 வயதான பிரெண்டன் டெய்லர், ஜிம்பாப்வே அணியின் மிகச் சிறந்த பேட்டர்களில் ஒருவராக உருவெடுத்தார். இதுவரை 207 போட்டிகளில் விளையாடி 11 சதங்களுடன் 6,704 ரன்களைக் குவித்துள்ளார்.
2021-இல் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர், 2019-இல் போட்டி அமைப்பாளர்கள் தன்னிடம் முறைகேடான அணுகுமுறையில் ஈடுபட்டதையும், அச்சுறுத்தலால் அதைப் பற்றி அறிவிக்கத் தாமதித்ததையும் வெளிப்படுத்தினார். இதற்காக ஐசிசி (ICC) அவருக்கு 3.5 ஆண்டுகள் தடை விதித்தது.
இந்தத் தடையை நிறைவு செய்த பிறகு, 2025-ஆம் ஆண்டில் மீண்டும் ஓய்வை திரும்பப் பெற்று அணிக்குத் திரும்பினார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு ஜிம்பாப்வே தயாராகி வரும் சூழலில் இவர் இச்சாதனையைப் படைத்துள்ளார்.


