முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் முறையான காரணத்தை தெரிவிக்குமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (15.09.2026) பிறப்பித்துள்ளார்.
சுரேஷ் சாலே
சுரேஷ் சாலே தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளராக சிகிச்சை பெற வேண்டுமா என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்கு விசாரணையின்போது தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், குறித்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததுடன், ஐவர் கொண்ட வைத்தியக் குழுவுக்கும் தேவையான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கோரிக்கையையும் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

