கோலாலம்பூர்:
கோத்தா பாருவிலுள்ள தெலிபோட் பகுதியில் இயங்கி வரும் பிரபல தாய்லாந்து உணவகம் ஒன்றில், ஆடவர் ஒருவர் சிறுமி ஒருவரை எட்டி உதைக்கும் சிசிடிவி (CCTV) காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து கோத்தா பாரு மாவட்டக் காவல் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இன்று இரவு 10.24 மணியளவில் இக்காணொளி குறித்துப் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததாகக் கோத்தா பாரு மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமது அஸ்மிர் டாமிரி அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
‘Threads’ மற்றும் ஃபேஸ்புக் (Facebook) போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த 47 வினாடிகள் கொண்ட காணொளியில், ஆடவர் ஒருவர் தனது பெற்ற மகள் எனக் கருதப்படும் சிறுமியை மிகக் கொடூரமாக எட்டி உதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
உணவக உரிமையாளர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்தச் சிசிடிவி பதிவை முதன்முதலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டப் பிரிவு 31(1)(a)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
“காணொளியில் உள்ள ஆடவர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் அடையாளங்களைக் கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.” என உதவி ஆணையர் முகமது அஸ்மிர் குறிப்பிட்டார்.



