சீனாவின் நிலைமை இவ்வளவு மோசமா இருக்கா.. கடன் வாங்கினால் தள்ளுபடி..!
உலகின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக இருக்கும் சீனா தற்போது மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. உலகளவில் பணவீக்கம் அதிகரிக்கும் காரணத்தால் மக்கள் செலவு செய்வதை குறைத்து வரும் வேளையில், மக்கள் தேவையற்ற பொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளனர்.
இதை தாண்டி வருமானத்தில் பெரிய உயர்வு இல்லாமலும், எங்கு திரும்பினாலும் பணிநீக்கம் பிரச்சனை இருப்பதாலும் தேவையான பொருட்களை வாங்குவதையும் குறைத்துள்ளனர்.

இதனால் நுகர்வோர் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது, சீனா போல் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்டு இருக்கும் நாட்டில் உள்நாட்டு நுகர்வு என்பது மிக முக்கியமான வர்த்தக பிரிவாக இருக்கும் காரணத்தால் இந்த மந்தமான நுகர்வோர் சந்தையை சரி செய்ய சீன அரசு மெகா திட்டத்தை அறிவித்துள்ளது.
சீனா அரசு மந்தமான வர்த்தக சந்தையை ஊக்குவிக்கும் வகையில் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் தாங்கள் வாங்கும் கடனில் அடுத்த ஒரு வருடத்திற்கு 1 சதவீதம் வட்டி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் கார், பைக், எலக்ட்ரானிக்ஸ், சுற்றுலா செல்ல, கல்வி, வீட்டு அலங்காரம், வீட்டு மறுசீரமைப்பு, சுகாதாரம் என அனைத்து நுகர்வோர் துறையிலும் 50000 யுவான் மதிப்பிலான கடனுக்கு 1 சதவீதம் வட்டி தள்ளுபடி கொடுக்க துவங்கியுள்ளது.
இதன் மூலம் மக்கள் அதிகளவில் ஆர்வமாக கடன் வாங்கி பொருட்களையும், சேவைகளையும் பெறுவார்கள், இதனால் உற்பத்தி, வேலைவாய்ப்பு, நுகர்வோர் சந்தை வளர்ச்சி அடையும் என சீன அரசு நம்புகிறது.
இதேபோல் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக அமைப்புகள் என தொழில் துறையை சார்ந்த அனைவரும் தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான கடன்களுக்கு 1 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படுகிறது.
இந்த வட்டி தள்ளுபடி செப்டம்பர் 1 முதல் 12 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளது. இது சீனா அரசின் மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதை பொருளாதார சந்தையில் balance sheet recession என அழைக்கப்படுகிறது.
சீனா குடும்பத்தில் சுமார் 60-70 சதவீத சொத்து மதிப்பு ரியல் எஸ்டேட் சொத்துக்களில் மட்டுமே இருந்து வருகிறது, இந்த நிலையில் கடந்த 5 வருடமாக அந்நாட்டில் வீட்டின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் அனைத்து குடும்பங்களின் சொத்து மதிப்பு குறைந்து வருகிறது.
உதாரணமாக 1 கோடி ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் மதிப்பு வெறும் 50 லட்சமாக உள்ளது, ஆனால் வங்கியில் 1 கோடி ரூபாய் கடனுக்கான வட்டியை தான் செலுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் வீட்டுக்கடனில் சொந்த வீடு வாங்கிய அனைவரும் எப்படியாவது கடனை அடைத்துவிட வேண்டிய கட்டாயத்திலும் இலக்கிலும் உள்ளனர்.
இதனால் சீனா மக்கள் பொருட்களை வாங்குவதும், செலவு செய்வதை குறைத்தும் வருகின்றனர். இந்த சங்கிலியை உடைக்க சீன அரசு மக்களுக்கு ஆசை காட்டி குறைவான வட்டியில் மீண்டும் அதிக கடன்களை கொடுக்க தயாராகி வருகிறது. இது செயற்கையை வர்த்தக சந்தையை மேம்படுத்தும் முயற்சி என்பதால் இத்திட்டம் எந்தளவுக்கு பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை.
அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால், சீனா பொருட்கள் மீது அமெரிக்கா, ஐரோப்பி நாடுகள் அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பகுதி ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் உள்ளூர் வர்த்தகமும் குறைந்திருக்கும் காரணத்தால் வர்த்தகம் இல்லாமல் நிறுவனங்களும், ஆலைகளும் மூடவதில் இருந்து தடுக்க இத்தகைய வட்டி மானிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது சீன அரசு.
இந்தியாவில் கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டம் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?

