ஜார்ஜ் டவுன், சுகாதாரக் காப்பீட்டுச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், அரசு மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, சுகாதாரச் சேவைகளுக்கான தேவைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்து திட்டமிட்டு மதிப்பீடு செய்து வருகிறது. சுகாதாரச் சேவைகளுக்கான தேவைகளில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிக்கத் தேவையான நிதி ஒதுக்கீடு உட்பட, பொது சுகாதாரத் துறையின் அன்றாட மற்றும் நீண்டகாலத் திட்டமிடலின் ஒரு பகுதியாகவே இத்தகைய திட்டமிடல்களும் மதிப்பீடுகளும் அமைகின்றன என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் மகாதர் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில், குறிப்பாக பொதுத் துறையில், எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிப்பதற்காகவும் அதற்கேற்ப செயல்படவும் நாங்கள் அன்றாட மற்றும் நீண்டகாலத் திட்டமிடலின் ஒரு பகுதியாக மதிப்பீடுகளைச் செய்கிறோம். சுகாதாரச் சேவைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான திட்டமிடல் மற்றும் அரசாங்கத்தின் நிதி ஆதரவு ஆகியவற்றிற்கு இந்த மதிப்பீடுகள் ஒரு அடிப்படையாக அமைகின்றன என்று இன்று இங்கு நடைபெற்ற மலேசிய அதிர்ச்சிக் காய சிகிச்சை மாநாடு (MTC) தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ஆண்டுக்கு 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ள சுகாதாரக் காப்பீட்டுச் செலவுகள் கவலைக்குரியதாக மாறியுள்ளதாகவும், பொதுமக்களின் மீதான நிதிச் சுமை மேலும் மோசமடைவதைத் தடுக்க இதற்கு தீவிர கவனம் தேவை என்றும் ‘KSI Strategic Institute for Asia Pacific’-இன் தலைவர் டான் ஸ்ரீ மைக்கேல் யோ கூறியதாக வெளியான செய்திகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். இந்த சுகாதாரக் காப்பீட்டுச் செலவுகள் பொதுமக்களுக்கு அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்பதையும், பொது சுகாதாரச் சேவைகளுக்கான தேவையைப் பாதிக்கக்கூடும் என்பதையும் அமைச்சு நன்கு அறிந்துள்ளது என்று டாக்டர் மகாதர் கூறினார்.
மலேசியர்களுக்கு மலிவான விலையில், நிலையான சுகாதாரக் காப்பீட்டு வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அரசாங்கத்தின் காப்பீடு மற்றும் தகாஃபுல் மருத்துவப் பாதுகாப்புத் திட்டம் உட்பட, இச்சிக்கலை ஆராய்வதற்கு சுகாதார அமைச்சும் நிதி அமைச்சும் ஒரு கூட்டுக்குழுவின் மூலம் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். காப்பீடு, அது தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை, காப்பீட்டுத் தவணைத் தொகை போன்ற அம்சங்களை ஒழுங்குபடுத்தும் பிற முகமைகளின் அதிகார வரம்பிற்குள் அவை பெரும்பாலும் வருகின்றன என்று அவர் கூறினார்.



