
புதிய புகையிரத பொது முகாமையாளர் நியமிக்கப்படாவிட்டால் செப்டம்பர் 17 ஆம் திகதி திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ரயில் திணைக்களத்தில் நிலவும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய ரயில் பொது முகாமையாளர் ஒருவரை உடனடியாக நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு புதிய பொது முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படாவிட்டால், எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் திகதி பல ரயில் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நிச்சயமாக இடம்பெறும் என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் பயண தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படாத காரணத்தினால், வரலாற்றில் முதன்முறையாக ரயில் பயணிகள் சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரயில் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ரயில் தொழிற்சங்கங்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ளது.
நாளைய கலந்துரையாடலில் உரிய தீர்வுகள் எட்டப்படாவிட்டால், திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என ரயில் தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

