பிரிட்டனில் கார் பந்தய தளத்தில் நடிகர் அஜித்தை தமிழக முதல்வர் விஜய் கட்டியணைக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பிரிட்டனில் நேற்று தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார் பந்தயத்தை நடத்தும் ’லீ மேன்ஸ்’ அமைப்பு வெளியிட்டிருந்தது.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவை விதி எண்.110 இன் கீழ் சில நாள்களுக்கு முன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டது.
இதுபற்றி நடிகர் அஜித் குமார் பேசுகையில், முதல்வர் விஜய் தனது பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். அவர் முதல்வரானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்து வருகிறார். எனது அழைப்பை ஏற்று அவர் இங்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
தமிழ்த் திரையுலகில் இருவரும் இரு துருவங்களாக இருந்த நிலையில், அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவிருப்பது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு முதல்வர் விஜய் சென்றுள்ளார். அங்கு, அவர் அஜித் குமாரை ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்துள்ளார். (a)


