பாலியல் குற்றவாளிகளை மீண்டும் மீண்டும் செய்பவர்களுக்குக் கூட, இரசாயன ஆண்மை நீக்கத்தை ஒரு தண்டனையாகப் பயன்படுத்துவதை மலேசியா கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்று இரண்டு வழக்கறிஞர்களும் ஒரு குற்றவியல் நிபுணரும் கூறுகின்றனர். பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜாஸ்மின் வோங், பாலியல் வன்முறை என்பது காம இச்சை அல்லது கட்டுப்படுத்த முடியாத தூண்டுதல்களால் ஏற்படுகிறது என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் இந்தத் தண்டனை அமைந்துள்ளது என்றும், ஆனால் ஆய்வுகள் இதற்கு மாறாகக் காட்டுகின்றன என்றும் கூறினார். பாலியல் வன்முறை, கற்பழிப்பு ஆகியவை அதிகாரம், கட்டுப்பாடு, பாலின சமத்துவமின்மை அத்தகைய வன்முறை இயல்பாக்கப்பட்ட ஒரு கலாச்சாரம் ஆகியவற்றால் தூண்டப்படுகின்றன என்பதில் ஆய்வுகள் பெரும்பாலும் உறுதியாக உள்ளன. இதை மருத்துவ ரீதியாக அடக்கக்கூடிய ஒன்றாகக் கருதுவது உண்மையான சிக்கலைத் தவறாகக் கண்டறிவதாகும் என்று அவர் எப்எம்டியிடம் கூறினார்.
மேலும், இந்தத் தண்டனை உடல் ஒருமைப்பாடு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமையுடன் முரண்படும் என்றும், இது ஒரு முக்கியப் புதிரை எழுப்புகிறது என்றும் வோங் கூறினார்: சம்மதம் இல்லாமல் செய்யப்படும் மருத்துவத் தலையீட்டை இங்கு ஒரு தண்டனையாக விதிக்க முடியுமா? கொடூரமான தண்டனைகளைத் தடைசெய்யும் அனைத்துலக ஒப்பந்தங்களை மலேசியா அங்கீகரிக்காததால், இரசாயன ஆண்மை நீக்கம் முறையை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அது பொருத்தமானதா என்பதை நீதிமன்றங்களே இறுதியில் முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். மேலும், மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்பு ஏற்கெனவே சில ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, இந்தத் தண்டனை சீரற்ற முறையில் பயன்படுத்தப்படலாம் என்றும் வோங் கவலை தெரிவித்தார்.
நல்ல சட்டப் பிரதிநிதித்துவம், சமூக அந்தஸ்து, வளங்களுக்கான அணுகல் ஆகியவை, யார் தண்டிக்கப்படுவார்கள், எவ்வளவு கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதை ஏற்கெனவே தீர்மானிக்கின்றன. ஏற்கெனவே நிலவும் சமத்துவமின்மைகளைக் கொண்ட ஒரு அமைப்பின் மீது திணிக்கப்படும் இத்தகைய ஊடுருவும் தண்டனையானது, உண்மையான தடுப்பாகச் செயல்படுவதற்குப் பதிலாக, சில குற்றவாளிகளை மற்றவர்களை விடக் கடுமையாகத் தாக்கும் மற்றொரு கருவியாக மாறும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பழமைவாத, சர்வாதிகாரத் தூண்டுதல்கள் ஏற்கெனவே வலுப்பெற்று வரும் ஒரு சூழலில், உடலின் மீதான இத்தகைய அரசுத் தலையீட்டைச் சட்டப்பூர்வமாக்குவதில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன் என்று அவர் மேலும் கூறினார்.
பாலியல் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் இரசாயன ஆண்மை நீக்கம் ஒரு சர்வ நோய்க்கும் மருந்தாகச் செயல்படும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் சலீம் பஷீர் கூறினார். மேலும், அந்தத் தண்டனையே மனிதாபிமானமற்றது. இழிவுபடுத்தக்கூடியது என்பதோடு கடுமையான பின்விளைவுகளைக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். தண்டிக்கப்பட்ட பாலியல் குற்றவாளிகள் தங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த பிறகு, காவல்துறையின் நெருக்கமான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறையுடன் இருப்பது அவர்களுக்குச் சிறந்ததாக இருக்கும் என்று சலீம் கூறினார்.
அவர்கள் பாலியல் ரீதியான தவறான நடத்தைகளில் ஈடுபடாமல் இருப்பதற்காக, பாலியல் எண்ணங்களையும் நடத்தைகளையும் கையாள உதவும் நேர்மறையான செயல்பாடுகளுடன், அவர்களின் அன்றாட வழக்கங்களை நிர்வகிக்க ஒரு முழுமையான அணுகுமுறை வகுக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். செவ்வாயன்று, பாலியல் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதற்கு உறுதியான சான்றுகள் இருந்தால், பாலியல் குற்றவாளிகளுக்கு இரசாயன ஆண்மை நீக்கத்தைக் கருத்தில் கொள்ள குடியரசு தயாராக இருப்பதாக சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் கூறினார். இருப்பினும், இந்தத் தண்டனையை ஆதரிக்கும் சான்றுகள் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளன என்று அவர் கூறினார்.
கொரியா, இந்தோனேசியா மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகள் சில வகை பாலியல் குற்றவாளிகளுக்கு — குறிப்பாக சிறார்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களுக்கு — இந்தத் தண்டனையைக் கட்டாயமாக்கியுள்ளன. அதேசமயம், தாய்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இரசாயன முறையில் ஆண்மை நீக்கத்தை விருப்பத்தின் அடிப்படையில் வழங்குகின்றன.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் பி. சுந்தரமூர்த்தி, பாலியல் குற்றங்கள் பல்வேறு நோக்கங்களால் தூண்டப்படுகின்றன என்று கூறினார். சில குற்றவாளிகள் கட்டாயப் பாலியல் உந்துதல்களுக்கு இணங்கச் செயல்படுகிறார்கள் என்றும், மற்றவர்கள் அதிகாரம், கட்டுப்பாடு, கோபம், போதைப்பொருள் பழக்கம் அல்லது பரந்த சமூகக் காரணிகளால் தூண்டப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். இதன் பொருள், இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் குற்றச் செயலுக்குக் காரணமான ஒரு கூறினை மட்டுமே கையாளும் என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை ஒரு குற்றவாளியின் பாலியல் உந்துதலைக் குறைக்க மட்டுமே செய்யும். ஆனால் அதை முற்றிலுமாக அகற்ற முடியாது என்றும் சுந்தரமூர்த்தி கூறினார். சில தண்டனை பெற்றவர்களிடையே இந்த நடவடிக்கை மீண்டும் குற்றம் புரிவதைக் குறைக்கக்கூடும் என்பதற்கு ஆதாரம் இருந்தாலும், இது அனைத்து வகை குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்று அர்த்தமல்ல என்று அவர் கூறினார். அதிக ஆபத்துள்ள குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்கள் குற்றம் புரிவதற்கான காரணங்களை மதிப்பிடவும், ஒவ்வொரு தனிநபருக்கும் எந்தத் தலையீடு மிகவும் பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்கவும் நாம் முதலில் ஒரு முறையான கட்டமைப்பை நிறுவ வேண்டும்.
இறுதியில் இரசாயன அடக்குமுறை பரிசீலிக்கப்பட்டால், அது மருத்துவ மதிப்பீடு, நீதித்துறை மேற்பார்வை, தகவலறிந்த ஒப்புதல் அல்லது மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்டக் கட்டமைப்பு, வழக்கமான மருத்துவக் கண்காணிப்பு மற்றும் காலமுறை ஆபத்து மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று அவர் கூறினார். மலேசிய சட்டம் போதுமான அளவு கடுமையானது, ஆனால் அது வலுப்படுத்தப்பட வேண்டும். பாலியல் குற்றங்களுக்கான மலேசியாவின் தற்போதைய தண்டனை போதுமான அளவு கடுமையானது. இருப்பினும் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கான கண்காணிப்பு, மறுவாழ்வில் சில மேம்பாடுகளைச் செய்ய முடியும் என்று வோங் கூறினார். தற்போது, ஒரு குழந்தை மீதான பாலியல் வன்கொடுமைக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.


