சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்களில் பட்டியலில் எம்.எஸ்.தோனியை முந்தி ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
தோனி தலைமையில் 41 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருந்த நிலையில், தற்போது 42 வெற்றிகளைப் பெற்று ரோகித் சர்மா அதனைத் தகர்த்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தோனியின் வெற்றி சதவிகிதம் 59 ஆக உள்ள நிலையில், ரோகித் சர்மாவின் வெற்றி சதவிகிதம் 77 ஆக உள்ளது. அதேபோல ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 சிக்ஸர்களை அடித்த முதல் சர்வதேச வீரர் எனும் சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
ஐசிசி கோப்பையை இந்திய வென்று 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
நடப்பு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 20 அணிகள் மோதுகின்றன. அவை ஏ.பி.சி.டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்திய நிலையில், தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வென்றுள்ளது. இந்நிலையில் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த கிரிக்கெட் தொடருடன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையுடன் அவர்கள் விடை பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
