கோலாலம்பூர்:
சரவாக், லோங் லெல்லாங் (Long Lellang) அருகே விபத்துக்குள்ளான ‘பறக்கும் மருத்துவச் சேவை’ ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக, போக்குவரத்து அமைச்சின்கீழ் இயங்கும் விமான விபத்து விசாரணைப் பணியகத்தின் (AAIB) அதிகாரிகள் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு மிரி சென்றடைகிறது.
விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேரும் வரை, நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களையோ அல்லது சம்பவ இடத்தையோ யாரும் தொடவோ, மாற்றவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
“விமான விபத்து விசாரணைப் பணியகத்தின் (AAIB) வழிகாட்டுதலின்படி, விபத்து நடந்த இடம் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகளின் வருகைக்குப் பிறகே பாகங்கள் ஆய்வு செய்யப்படும்,” என்று, மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAAM) தலைமைச் செயல் அதிகாரி டத்தோ கெப்டன் நோரஸ்மான் மஹ்மூட் கூறினார்.
இன்று காலை 7 மணியளவில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 18 வீரர்களுடன் கூடிய ஹெலிகாப்டர் ஒன்று மிரியிலிருந்து லோங் லெல்லாங் பகுதிக்கு புறப்பட்டுச் சென்று தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
அவர்களுடன் காவல் துறையின் இரு ஹெலிகாப்டர்களில் 11 அதிகாரிகளும், லோங் லாமாவிலிருந்து 4 காவல் துறை அதிகாரிகளும், மலேசியக் கடலோரக் காவல் படையைச் (MMEA) சேர்ந்த 4 அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த நபர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளைக் காவல் துறை முன்னெடுத்து வருகிறது. இதற்காக மிரி மருத்துவமனையில் (Miri Hospital) அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பெறப்படும் மரபணுச் (DNA) மாதிரிகள் ஒப்பீடு செய்யப்பட்டு உடல்கள் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 3.58 மணியளவில் ‘Bo-105’ ரகத்தைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர், 5 பயணிகளுடன் லோங் லெல்லாங் STOLport அருகே விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


