
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது கூட்டத்தொடரில் உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டேர்க், குறைந்தபட்சம் ஒரு நாடாவது பங்கேற்கும் 60-க்கும் மேற்பட்ட போர்கள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக உயர்ந்த எண்ணிக்கை என்றும் தெரிவித்தார். மேலும், பன்னாட்டுச் சட்டம் மீதான மரியாதை குறைந்து வருவதும், ஐ.நா. சாசனத்தின் மீதான உறுதியுணர்வு பலவீனமடைந்து வருவதும் குறித்து அவர் எச்சரித்தார்.
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா – ஈரான் இடையேயான புதிய பகைமை அந்தப் பிராந்தியத்தைப் பதற்றமடையச் செய்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தக் நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும் என்று குறிப்பிட்டதோடு, உடனடியாகப் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறும் வலியுறுத்தினார். உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதிகரித்து வரும் பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் தீவிரமடைந்துள்ள எரிசக்தி கட்டமைப்புத் தாக்குதல்களை அவர் மேற்கோள் காட்டினார். கடந்த மாதம் உக்ரைனைச் சேர்ந்த மூவர் உருசியாவின் தன்னாட்சி ஆளில்லா வானூர்திகளால் (டிரோன்கள்) கொல்லப்பட்டதாக வந்த செய்திகள் குறித்து கவலை தெரிவித்த அவர், கியவ அரசும் இதுபோன்ற அமைப்புகளைச் பரிசோதித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மனித முடிவுகள் இன்றிக் கொல்லக்கூடிய ஆயுதங்களுக்கு சர்வதேச தடை விதிக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“இந்த வெறித்தனத்திலிருந்து மீள ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது: அது ஐ.நா. சாசனத்தை மதிக்கின்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆகும்,” என்று டேர்க் கூறினார்.
உள்நாட்டுப் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துமாறும், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அரசுகளை வலியுறுத்திய அவர், தேசிய நீதிமன்றங்களால் செயல்பட முடியாத அல்லது செயல்பட விரும்பாத சூழலில் கொடுஞ்செயல் குற்றங்களை விசாரிக்க உலகளாவிய அதிகார வரம்பின் பயன்பாட்டை விரிவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டார். “மோதல்களின் துயரங்கள் நம் அனைவரின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் தொட்டுச் சென்றுள்ளன,” என்று குறிப்பிட்ட அவர், இடப்பெயர்வு, பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் இவை ஏற்படுத்தும் நீடித்த தாக்கங்களையும் சுட்டிக்காட்டினார்.

