(ரெ. மாலினி)
மலாக்கா:
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் வகுப்பறைப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், மலாக்கா மாநிலத்தில் 53 பள்ளிகளில் IBS (தொழில்மயமாக்கப்பட்ட கட்டுமான முறை) மூலம் கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன என கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
நேற்று மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்த அவர், அங்கு நடைபெற்று வரும் நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளியில் 6 லட்சம் ரிங்கிட் செலவில் இரண்டு புதிய வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. IBS முறையில் மேற்கொள்ளப்படும் இக்கட்டுமானப் பணிகள் 20 வாரங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, 2027ஆம் ஆண்டு பள்ளி அமர்வில் இரண்டு வயதுக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேரவுள்ளதால், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை முன்கூட்டியே மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மலாக்காவில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 53 பள்ளிகளில் 49 பள்ளிகள் ஏற்கனவே தங்களது கொள்ளளவைத் தாண்டி இயங்கி வருவதாகவும், சில வகுப்புகளில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார்.
IBS முறையில் கூடுதல் வகுப்பறைகள் அமைப்பதன் மூலம், தற்போது வகுப்பறைகளாகப் பயன்படுத்தப்படும் இசை அறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட சிறப்பு அறைகளை மீண்டும் அவற்றின் அசல் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் என்றும் அவர் விளக்கினார்.


மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளிக்கு கிடைக்கவுள்ள இரண்டு புதிய வகுப்பறைகள், பள்ளியின் இடவசதி நெருக்கடியைக் குறைப்பதுடன், மாணவர்களுக்கு வசதியான மற்றும் சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் மா. வடிவேலன், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வழங்கியமைக்காக மலேசிய கல்வி அமைச்சுக்கு நன்றி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதலாம் ஆண்டில் கூடுதல் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் பெற்றோர்-ஆசிரியர் சங்கமும் களமிறங்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ். விக்னேஸ்வரன் மற்றும் பள்ளி வாரியத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம் , ஆகியோரும் கல்வித் துணை அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர்.



