கோலாலம்பூர்:
சரவாக் மாநிலம் லோங் லேலாங் STOLport அருகே இன்று பிற்பகல் சுகாதார அமைச்சின் ‘பறக்கும் மருத்துவச் சேவை’ (Flying Doctor Service) ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உட்பட 5 பேரின் தற்போதைய நிலை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
மிரியில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டரில், தொலைதூரக் கிராமப்புறப் பகுதிகளுக்கு மருத்துவப் பணியாற்றுவதற்காக ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு மருத்துவ உதவியாளர் மற்றும் இரு செவிலியர்கள் பயணித்துள்ளனர்.
இன்று மாலை 3.58 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் (SAR) மற்றும் மருத்துவப் பணியாளர்கள் விரைந்து சென்று தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொலைதூர வனப்பகுதிகளில் வாழும் கெலாபிட் (Kelabit) மற்றும் பெனான் (Penan) பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகளைச் கொண்டு சேர்ப்பதில் இந்த ஹெலிகாப்டர் சேவை மிக முக்கியப் பங்காற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “பாதுகாப்புப் படையினர், மீட்புக் குழுவினர் மற்றும் விமானப் போக்குவரத்து அமைப்புகளுடன் இணைந்து தகவல்களைத் திரட்டி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கி வரப்படுகின்றன. தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், பொதுமக்களும் ஊடகங்களும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ வதந்திகளையோ பரப்ப வேண்டாம்,” என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அமாட் கேட்டுக்கொண்டார்.
மேலும், இவ்விபத்துக்கான உண்மையான காரணம் குறித்துப் போக்குவரத்து அமைச்சின்கீழ் இயங்கும் விமான விபத்து விசாரணை பிரிவு (AAIB) விரிவான விசாரணை மேற்கொள்ளவுள்ளது.



