India
oi-Vigneshkumar
வடோதரா: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் சோதனை ஓட்டத்தை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சோதனை ஓட்டம் தொடங்கிய 2 முதல் 4 மாதங்களுக்குப் பிறகு புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் பிரதமர் நேரடியாக இதனை தொடங்கி வைப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பை- அகமதாபாத் வழித்தடத்தில் அமைகிறது. 508 கிமீ தூரத்தில் அமையும் இந்த பாதையில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் அமையவுள்ளது. இது மும்பை- அகமதாபாத் இடையேயான ரயில் பயணத்தை வெறும் 2 மணி நேரமாக குறைக்கும். இன்னும் சில மாதங்களில் புல்லட் ரயிலின் முதல் கட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

எப்போது
இதற்கிடையே குஜராத் மாநிலம் வடோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் தயாரிக்கப்படும் புல்லட் ரயிலின் முதல் பாடி ப்ரேம் தயாரிக்கப்பட்டு, சோதனைக்கு க்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்துக்குள் இந்தியாவின் புல்லட் ரயில் சோதனை நடத்தப்படும். 2 முதல் 4 மாதங்கள் சோதனை நடைபெற்ற பிறகு, புல்லட் ரயிலை பிரதமரே நேரடியாக தொடங்கி வைப்பார்” என்றார்.
அஸ்வினி வைஷ்ணவ்
தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு புல்லட் ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும், இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் வடோதராவில் இருந்து மும்பையை வெறும் ஒன்றரை மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்றும் அவர் கூறினார். அவர் மேலும், “வடோதராவில் இருந்து புல்லட் ரயிலில் பயணம் செய்தால், வெறும் ஒன்றரை மணி நேரத்தில் மும்பையை சென்றடையலாம். புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.. சூரத்-வாபி வழித்தட பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும்.
இந்திய ரயில்வே
இந்திய ரயில்வேயின் செயல்பாடுகள் மற்றும் முன்பதிவு முறைகளை நவீனப்படுத்துவதுடன், கட்டுமான நடைமுறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவீன முறைகளை கொண்டு வந்து பல்வேறு சீர்திருத்தி முறைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சரக்கு ரயில் போக்குவரத்தையும் நவீனப்படுத்தும் வகையில் புதிய வகை பெட்டி வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உப்பை கொண்டு செல்வதற்காக பிரத்யேக பெட்டி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டு வருகிறது.
புதிய ரயில் பாதை
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பல்வேறு ரயில்வே திட்டங்கள் தற்போது நிறைவடைந்துள்ளது. செனாப் பாலம் மற்றும் மிசோரமை ரயில்வே நெட்வொர்க்கிற்குள் கொண்டு வந்துள்ளோம். நாடு முழுவதும் 280 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 36,000 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வந்தே பாரத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட சரக்கு ரயில்களை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
ரயில்வேயை மறுசீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கொரோனா பெருந்தொற்று சவால்களுக்கு மத்தியிலும் வேகம் பெற்றது. திட்டத்தின் முதல் பகுதி 2020ஆம் ஆண்டில் முடிந்த நிலையில், அடுத்தடுத்த பணிகளும் துரிதமாக நடைபெற்றன. இந்த புதிய ரயிலவ்வே எதிர்காலத்தில் பல தலைமுறைகளுக்கும் பயனளிக்கும்” என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.



