“நிலவு அமெரிக்காவுக்கே சொந்தம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நிலவு எங்களுக்கே” என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நிலவு மற்றும் பூமியின் படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தில் அமெரிக்கக் கொடியும் இடம்பெற்றுள்ளது.
பூமியின் ஒரே இயற்கைத் துணைக்கோளான நிலவு, பல தசாப்தங்களாக விண்வெளி ஆய்வின் முக்கிய இலக்காக இருந்து வருகிறது. குறிப்பாக, பனிப்போர் காலத்தில் நிலவை ஆய்வு செய்வதிலும், மனிதர்களை அங்கு அனுப்புவதிலும் அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
1969 ஜூலை 20-ஆம் தேதி, நாசாவின் ‘அப்பல்லோ 11’ விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ‘பஸ்’ ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் கால்பதித்தனர்.
தற்போது அமெரிக்கா மட்டுமின்றி, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் நிலவு தொடர்பான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல நாடுகள் ஆளில்லா விண்கலங்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியுள்ளன.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் ‘ஆர்ட்டெமிஸ்’ திட்டத்தின் கீழ் மீண்டும் நிலவு ஆய்வில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதுடன், பெண் விண்வெளி வீராங்கனையையும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் கீழ், நிலவின் மேற்பரப்பில் எதிர்காலத்தில் மனிதர்கள் வசிக்கும் வகையிலான தளங்களை அமைப்பதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, சீனாவும் நிலவு ஆய்வில் கவனம் செலுத்துவதுடன், எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான குடியிருப்புகளை அமைக்கும் திட்டங்களையும் உருவாக்கி வருகிறது.
இதனால், நிலவு ஆய்வைத் தாண்டி, எதிர்காலத்தில் நிலவில் மனிதக் குடியேற்றத்தை அமைக்கும் போட்டி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தீவிரமடையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


