
பெண்களினதும் சிறுவர்களினதும் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைப் பிரதிநிதியை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ வங்ஜெல் (Phuntsho Wangyel) அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இங்கு கவனம் செலுத்தினர். குறிப்பாக, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம், பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை ஒழித்தல், தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் பாலின சமத்துவத்திற்குப் பதிலளிக்கும் வகையிலான கொள்கை வகுப்பை உறுதிசெய்தல் தொடர்பாகவும் இங்கு கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பிற்குள் பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதையும் பாதுகாப்பதையும் மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வலியுறுத்தினார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வைப் பாராளுமன்றத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் நாடு முழுவதும் சமூகங்களிடையே கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன், பெண்களின் சுகாதாரம், அதிகாரமளித்தல், பாலின சமத்துவம், வன்முறை மற்றும் பாகுபாடு போன்ற விடயங்கள் குறித்துச் சிவில் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், UNFPA நிபுணர்களுடன் அடிக்கடி அறிவுசார் தகவல் பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது யோசனை முன்வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனையை ஏற்றுக்கொண்ட UNFPA இன் இலங்கைப் பிரதிநிதி, இந்த வேலைத்திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்புகள், நிபுணத்துவ அறிவுசார்ந்த ஒத்துழைப்புகள் மற்றும் சர்வதேச ரீதியான சிறந்த நடைமுறைகள் (Best Practices) சார்ந்த ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தர ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) தயார் என்றும் பிரஸ்தாபித்தார்.

