ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே எண்ணெய் கப்பல்கள் மீதான பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி மோதல் அச்சம் அதிகரித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.
எண்ணெய் கப்பல்களைக் குறிவைத்து இரு தரப்பினரும் நடத்தி வரும் இந்த மோதல்களால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் எனவும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
கத்தாரைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தளங்கள் மீது அமெரிக்கா பதிலடி கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், பாதுகாக்கப்பட்ட ஹோர்மூஸ் நீரிணைப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற அமெரிக்கக் கப்பல் மீதும், அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்கள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரானின் மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால், எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கியுள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைப் போர்க் குற்றம் எனக் கண்டித்துள்ள ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம், தனது எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகப் பதில் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, ஈரானின் நாதன்ஸ் அணுசக்தி மையத்திற்கு அருகே உள்ள பிக்-அக்ஸ் (Pickaxe) நிலத்தடி அணுசக்தி வளாகத்தைத் தாக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கு ஈரானும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி அணு ஆயுத மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

