‘பிக்பாஸ் தமிழ் சீசன் 7’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவி மற்றும் மகனைப் பிரிந்து திருமண வாழ்க்கையிலிருந்து விலகியுள்ளதாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘அருவி’, ‘வாழ்’, ‘டாடா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரதீப் ஆண்டனி, தனது காதலி பூஜாவை 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவொன்றை வெளியிட்ட அவர், “நான் தவறான நபரைத் திருமணம் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். திருமணமானதில் இருந்து மோசமான மனிதனாக மாறிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒருவருடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு இருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “இன்னொருவருடன் இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. இப்போது எனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்திருக்கிறேன். இந்த உறவில் என்னால் மூச்சுக்கூட விட முடியவில்லை. குழந்தை அதன் அம்மாவுடன் இருப்பதே நல்லது என்று நினைத்தேன்” எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், பின்னர் அதனை பிரதீப் ஆண்டனி நீக்கினார்.
இதையடுத்து, தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் விளக்கமளித்த அவர், தனிப்பட்ட விடயத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தனது தவறு என்றும், அந்தப் பதிவு அப்போது ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
‘பிக்பாஸ் தமிழ் 7’ நிகழ்ச்சிக்குப் பின்னர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான பிரதீப் ஆண்டனியின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.


