டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில் இன்று மதியம் 6 மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறித்த கட்டிடம் 75 பேர் தங்கும் வகையிலான வாடகை விடுதியாகச் செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதியம் சுமார் 1.30 மணியளவில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தகவலறிந்ததும் டெல்லி பொலிஸார், தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதுவரை இடிபாடுகளிலிருந்து 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்துக்கு அருகில் சத்ய நிகேதன் பகுதி அமைந்துள்ளதால், அங்கு ஏராளமான மாணவர்கள் தங்கியுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்தபோது, அதற்குள் சுமார் 50 மாணவர்கள் இருந்திருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இடிபாடுகளுக்குள் இருந்து உதவி கோரி குரல்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மீட்புக் குழுவினர் நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன


