இந்திய சமூகத் தலைவர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் சிறப்பு கலந்துரையாடல் அமர்வு செப்டம்பர் 3 ஆம் நாள் பிரதமர் அலுவலகம், புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா கட்டடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில், மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) சார்பில் அதன் தலைவர் முஹம்மது அஸ்மான் ஷாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஆதம் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது, இந்திய முஸ்லிம் சமூகத்தின் நிலைமை, எதிர்கால வளர்ச்சி மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, இந்திய முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தொகை மற்றும் அதற்கான அங்கீகாரம், தேசிய வளர்ச்சி திட்டங்களில் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் தேவைகள், எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலனுக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் ஆகியவை குறித்து கருத்துகள் பெர்மிம் சார்பாக பகிரப்பட்டன.


அத்துடன், இந்திய முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை ஒருங்கிணைத்து கவனிப்பதற்காக பிரதமர் அலுவலகத்தில் தனிப்பட்ட ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள் குறித்து பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பிரதமர் கவனமாகக் கேட்டறிந்ததுடன், அவை தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பெர்மிம் நம்புவதாக பெர்மிமின் தேசிய தலைவர் அஸ்மான் ஷாஹ் கூறினார்.
இந்த சந்திப்பு, நாட்டின் இந்திய முஸ்லிம் சமூகத்தின் குரலை அரசாங்கத்தின் உயர்மட்ட கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு முக்கியமான தளமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது. சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காக அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று அஸ்மான் ஷாஹ் தெரிவித்தார். மேலும் இக்கலந்துரையாடலில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ராமணனும், தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாஸிலும் கலந்து கொண்டு இந்திய சமூகத் தலைவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.



