யாழ்ப்பாணம் நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் வைத்தியசாலை வீதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், அசுத்தமான வடிகால்கள் மற்றும் துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட யாழ் நகரத்தினுடைய நுழைவு பகுதியாக காணப்படுகின்ற செம்மணியினுடைய வளைவு பகுதியை அண்மித்திருக்கக்கூடிய அரியாலை பிரதேசத்தை நோக்கி நகர்வதற்கான வீதியினுடைய
இருமருங்கிலும் தொடர்ச்சியாக அதிகளவிலான குப்பை கூளங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது.
யாழ் நகருக்குள் ஒருவர் வருகை தருகின்ற போது இவற்றை அவதானித்த பின்பு நகருக்குள் பிரவேசிக்கிறார்கள். இதனை நகரத்தினுடைய பரிபாலனத்தை மேற்கொள்கின்ற உள்ளூராட்சி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இந்த பிரதேசத்தினுடைய பராமரிப்புக்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு உலகின் பல பகுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு மக்கள் வருகை தரும் நிலையில், நகரின் மத்தியில் காணப்படும் இந்த அசுத்தமான சூழலினால் துர்நாற்றத்தை சகிக்க முடியாத மக்கள் மூக்கை முடிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.
ஐபிசி தமிழ் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டு, வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பணிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பாண நகரின் நுழைவுப் பகுதிகளில் தொடர்ந்தும் காணப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றி துர்நாற்றம் வீசுவதை தடுப்பதற்கு யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

