குவாந்தான்:
பகாங், தெமெர்லோவில் உள்ள பாலர் பள்ளி ஒன்றில், 2 வயது சிறுமி ஒருவரை குழந்தை பராமரிப்பாளர் கொடூரமாக நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் 29 வயது தாய், நேற்று (செப்டம்பர் 5) மாலை சுமார் 6 மணியளவில் தெமெர்லோ காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார்.
பாலர் பள்ளியில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படும் காட்சி அடங்கிய காணொளி இணையத்தில் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தெமெர்லோ மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி கமிஷனர் மொஹ்ட் நசிம் பஹ்ரோன் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக் கோப்பு திறக்கப்பட்டுள்ளதாகவும், 2001 ஆம் ஆண்டு குழந்தை பாதுகாப்புச் சட்டம் பிரிவு 31(1)-இன் கீழ் (Child Act 2001) வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விசாரணை முழுமையாக நிறைவடைந்ததும், உரிய நடவடிக்கைக்காக விசாரணைக் கோப்பு பொது வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.



