பாடசாலைகளின் பெயர் மற்றும் இலச்சினைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் கிரிக்கெட் பெருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு கல்வி அமைச்சு முழுமையான தடை விதித்துள்ளது.
பாடசாலைகளின் பெயர்கள் அல்லது இலச்சினைகளைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் முழுமையான தடை விதித்துள்ளது.
புதிய வழிகாட்டலின் கீழ், பாடசாலை ஒன்றின் பெயர் அல்லது இலச்சினையைப் பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் பாடசாலை நிகழ்வுகளாகவே கருதப்பட்டு, இந்தத் தடை உத்தரவுக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 ஆம் இலக்க சுற்றுநிருபத்திற்கு அமைவாக, இந்த உத்தரவை மீறும் வகையில் நடத்தப்படும் எந்தவொரு நிகழ்வையும் உடனடியாகத் தடை செய்வதற்கான அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முக்கிய போட்டிகளின் போது மாணவர்கள் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு ஆளாகுவதாகப் பெற்றோரிடமிருந்து தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது அதன் இலச்சினையைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை ஊக்குவிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பாடசாலை இலச்சினை பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் பாடசாலைக்குரிய நிகழ்வாகவே கருதப்படுவதால் அங்கு எவ்வித போதைப்பொருட்களும் பயன்படுத்தப்படக் கூடாது எனவும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
குறிப்பாகப் பாடசாலைகளுக்கு இடையிலான முக்கிய கிரிக்கெட் பெருவிழாக்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் இந்த உத்தரவு மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

