நீர்கொழும்பில் இருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று பழைய மினுவாங்கொடை வீதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்த ஒரு பிள்ளையின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய தந்தை காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர், மீரிகம, லோலுவாகொடவைச் சேர்ந்த 32 வயதுடைய ஹெட்டிஆராச்சிகே சசினி உதேஷிகா அபேரத்ன என்ற ஒரு பிள்ளைத் தாயாவார்.
உயிரிழந்த பெண்ணும் அவரது தந்தையும் வியாழக்கிழமை (3) முற்பகல் கம்பஹாவை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை, அவர்களுக்குப் பின்னால் வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதனால் தந்தையும் மகளும் மோட்டார் சைக்கிளில் இருந்து இருபுறமும் தூக்கி வீசப்பட்டதுடன், மகள் பேருந்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


