அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் ஆட்சி முன்னெப்போதையும் விட பலவீனமாக உள்ளது என்றும், அது விரைவில் வீழ்ந்துவிடும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவத் தலைவர்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஈரானிய ஆட்சி தற்போது தள்ளாடிக் கொண்டிருப்பதாகவும், தனது பிழைப்பிற்காகப் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆட்சியை வீழ்த்தி அச்சுறுத்தலை ஒரேயடியாக அகற்றுவது சாத்தியமானது என்றும், அது கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பதிலடித் தாக்குதல்
ஈரானின் மதகுருமார்களால் நடத்தப்படும் அரசைப் பல தசாப்தங்களாகத் தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக கருதி வந்த நெதன்யாகு, பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கினார்.இருப்பினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாதம் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார்.

தற்போது அமெரிக்கா மேலும் பொருளாதார அழுத்தத்தை விதித்து தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதால், ஈரான் வளைகுடா நாடுகள், ஜோர்டான் மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதிகள் மீது பதிலடித் தாக்குதல் நடத்தியபோதிலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை.
இஸ்ரேலின் இராணுவ வலிமை
ஈரான் இஸ்ரேலைத் தாக்காதது தற்செயலானது அல்ல என்றும், இஸ்ரேலின் இராணுவ வலிமையையும் உறுதியையும் அவர்கள் அறிந்துள்ளதாலேயே மற்ற நாடுகளைத் தாக்கும் ஈரான் தம்மைத் தாக்கத் தயங்குவதாகவும் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

Image Credit: AFP
எதிர்வரும் ஒக்டோபர் 27 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கருத்துக்கணிப்புகளில் நெதன்யாகு பின்தங்கியுள்ளதாகவும், ஈரான் விவகாரத்தில் அவர் தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

