கோலாலம்பூர்:
அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 200,000 வங்காளதேச தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த மலேசியா திட்டமிட்டுள்ளதாக வங்காளதேச அமைச்சர் கூறியுள்ளார்.
“மலேசிய அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அந்தத் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்படுவார்கள்,” என்று வங்காளதேசத்தின் உள்ளூர் அரசாங்கம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் மீர் ஷாஹே ஆலம் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாத இறுதியில் அந்த வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் கட்டம் கட்டமாகத் தொடங்கி, ஆறு மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மொத்தமுள்ள தொழிலாளர்களில், 10,000 பேர் வேலைவாய்ப்புக்கான செலவுகளை ஏற்க வேண்டியதில்லை,” என்று ஆலம் கூறியதாக ‘தி டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.
வங்காளதேசத்துக்கான மலேசியத் தூதர் முகமடி ஷுஹாதா ஒஸ்மானும் உள்ளூர் அரசாங்கம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொயின் கான் ஆகியோருக்கு இடையே டாக்காவில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, ஆலம் தனது அறிவிப்பை வெளியிட்டார்.
மலேசியாவில் கிட்டத்தட்ட 800,000 பதிவுசெய்யப்பட்ட வங்காளதேச தொழிலாளர்கள் உள்ளதாக அவர் கூறினார்.



