தங்கம் வாங்க துபாய் ரூட்டை பிடித்த இந்தியர்கள்..!! 3 மாசத்துல இவ்வளவு நடந்திருக்கா?
நம் நாட்டு மக்களின் கலாச்சாரத்துடன் ஒன்றி போனது தங்கமும் தங்க நகைகளும். இதனால் உலகளவில் அதிகமாக தங்கம் வாங்கும் ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியா பொதுவாக பல்வேறு நாடுகளிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்கிறது. ஆனால் இதில் அண்மை காலமாக ஒரு மாற்றம் நடந்திருக்கிறது.
சமீப நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா அதிகளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறதாம். அதாவது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படும் அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது என குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் தங்க கட்டிகளின் இறக்குமதி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 47.1 சதவீதம் அதிகரித்து 11.01 பில்லியன் டாகராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 7.49 பில்லியன் டாலராக இருந்தது. மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்திய போதும் தங்கம் இறக்குமதி குறையாமல் அதிகரிக்கவே செய்துள்ளது.
இதில் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 649.4 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 235.9 மில்லியன் டாலராகவே இருந்தது. அந்த வகையில் 175.2 சதவீதம் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதே வேளையில் உலகின் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 17.7 சதவீதம் குறைந்துள்ளது.
ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கம் இறக்குமதி உயர்வுக்கு துபாய் மட்டுமே முழுமையான காரணமாக இருந்துள்ளது. இதனால் இந்தியாவின் மாதாந்திர தங்கம் இறக்குமதியில் துபாயின் பங்கு முந்தைய ஆண்டு 12.8 சதவீதமாக இருந்து இந்த ஆண்டில் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஈரான் போர் காரணமாக அந்நிய செலாவணியை சேமிக்க கடந்த மே 13 அன்று மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இது தான் இந்தியா துபாயில் இருந்து அதிகமாக தங்கம் இறக்குமதி செய்வதற்கு முக்கிய காரணம். இந்தியா – ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது.
இதன் காரணமாக தங்கம் இறக்குமதிக்கு வரி சலுகை கிடைக்கிறது. அதாவது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்தால் 14% மட்டுமே இறக்குமதி வரி செலுத்தினால் போதும், இதுவே மற்ற நாடுகளுக்கு இது 15 சதவீதமாகும். அதாவது மற்ற நாடுகளை விட ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்தால் 1% வரி குறைகிறது.
இந்த 1 சதவீத வரி வித்தியாசம் கூட வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தான் தங்க வணிகர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகம் வழியாக தங்கத்தை இறக்குமதி செய்கிறார்கள். மேலும் வேறு நாடுகளின் தங்கத்தை அமீரகம் வழியாக இந்தியா கொண்டு வருகிறார்கள். பொதுவாக இந்தியாவைவிட துபாயில் தங்கம் விலை குறைவு என்பதால் சாதாரண மக்கள் துபாய் சென்று அனுமதிக்கப்பட்ட அளவுக்கு தங்கம் வாங்கி கொண்டு வருவார்கள். தற்போது வியாபாரிகளும் அதே நுணுக்கத்தை பின்பற்றுகிறார்கள்.
1% வரி சலுகை தான் இந்திய வணிகர்கள் அதிகமாக துபாயில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய காரணம் என கூறும் GTRI அமைப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளது.
