Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் டிஜிட்டல் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் வழங்கும் வசதி செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால், புதிதாக வாகனம் வாங்குவோர் வாகனப் பதிவை அதாவது, டிஜிட்டல் ஆர்சி-யை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று (ஆர்.சி.) பெறுவதற்குக் கட்டணமாக ரூ.250 விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்குக் கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றிதழ் ஆகியவை மின்னணு (டிஜிட்டல்) முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 15.9.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், டிஜிட்டல் முறையில், அதாவது ‘டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ்’ மற்றும் ‘டிஜிட்டல் ரிஜிஸ்ட்ரேசன் சர்ட்டிபிகேட்’ (டிஜிட்டல் ஆர்.சி.) வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
மின்னணு வாகனப் பதிவுச்சான்றிதழ் முறை (டிஜிட்டல் ஆர்.சி.) அறிமுகம் செய்வதன் மூலம், புதிய வாகனம் வாங்குவோர், டிஜிட்டல் ஆர்.சி.யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் கியூஆர் கோர்டு-ஐ ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்க முடியும். இதன் மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ, இந்த முறையினால் மீண்டும் அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக்கொள்ளவும் முடியும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப்பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து எங்கும் பதிவு/உரிமம் வழங்குதல் (எனிவேர் ரிஜிஸ்ட்ரேசன்/லைசென்சிங்) என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்” இவ்வாறு கூறியுள்ளார்.



