கோலாலம்பூர்:
இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவரின் துரிதமான மற்றும் சமயோசிதமான நடவடிக்கையால், ‘காதல் மோசடி’ கும்பலின் வலையில் சிக்கிய 71 வயதுப் பாட்டி ஒருவர் தமது RM10,000 தொகையைப் பறிகொடுக்காமல் நல்வாய்ப்பாகப் தப்பியுள்ளார்.
நேற்று (செப்டம்பர் 2) மாலை சுமார் 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
71 வயது மமூதாட்டி ஒருவரை இ-ஹெய்லிங் ஓட்டுநர் ரெம்பாவில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக்கு (BSN) அழைத்து வந்துள்ளார். அப்போது அம்முதியவர் பணப் பரிவர்த்தனை செய்ய முயன்ற விதம் மீது சந்தேகம் கொண்ட ஓட்டுநர், உடனடியாக ரெம்பாவ் போலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு தகவல் அளித்ததாக ரெம்பாவ் மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி சூப்ரண்டண்ட் நியாம்போய் மிங் கூறினார்.
தகவல் கிடைத்ததும், ரெம்பாவ் துணை போலிஸ் நிலைய அதிகாரி தலைமையிலான போலிஸ் படையினர் விரைவாக வங்கிக்குச் சென்று சோதனையிட்டனர்.
“போலிசார் வங்கிக்குச் சென்றபோது, அந்த மூதாட்டி மோசடிக் கும்பலின் கணக்கில் RM10,000 தொகையைச் செலுத்த முயன்றுகொண்டிருந்தார். உடனடியாக தலையிட்ட போலிசார் அந்தப் பணப் பரிவர்த்தனையைத் தடுத்து நிறுத்தி, அப்பணத்தை மீண்டும் முதியவரின் BSN கணக்கிலேயே பாதுகாப்பாகச் செலுத்த வைத்தனர்,” என்று நியாம்போய் மிங் தெரிவித்தார்.
இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் அந்த மூதாட்டி ஏற்கனவே இம்மாஃபியா கும்பலின் பொறியில் சிக்கி, இருமுறை முறையே RM4,950 மற்றும் RM4,900 (மொத்தம் RM9,850) தொகையை அந்த மோசடிக் கும்பலின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



