Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசி இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்டீபன் ஃபிளமிங் இடத்தில் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக மைக் ஹசி நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக இருந்து வந்த ஸ்டீபன் ஃபிளமிங், 2 மாதங்களுக்கு முன் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஐபிஎல், எஸ்ஏ20 மற்றும் எம்எல்சி என்று 3 வகையான லீக்குகளிலும் அடுத்தடுத்து சொதப்பியதால், ஃபிளமிங் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. இதனால் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

முதற்கட்டமாக ஹேமங் பதானி, ரோஜர்ஸ், மெக்கல்லம் உள்ளிட்டோர் பெயர்கள் அடிப்பட்டன. இதன்பின் சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் வெளிநாட்டு பயிற்சியாளரை தான் நியமிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதேபோல் தோனியுடன் நெருக்கமாக பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பலரும் கேரி கிர்ஸ்டன் பெயரை விவாதிக்க தொடங்கினர்.
ஆனால் கேரி கிர்ஸ்டன் தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக ஆல்பி மோர்க்கல், மைக் ஹசி மற்றும் மெக்கல்லம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. இப்படியான சூழலில் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளமிங் நியமனம் செய்யப்பட்டார்.
இதனால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி செல்ல வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஃபரை மைக் ஹசி நிராகரித்திருக்கிறார். இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக மைக் ஹசி நியமனம் செய்யப்படலாம் என்ற வாதங்கள் வலுவடைந்திருக்கின்றன.
ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மைக் ஹசியை இணைக்க தோனி திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாததால், உடனடியாக சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வந்தார். தோனி – மைக் ஹசி – ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் சிந்தனைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இதனால் மைக் ஹசி தான் பயிற்சியாளர் என்ற அறிவிப்பு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


