International
oi-Halley Karthik
பிஷ்கேக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு(SCO) இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் இவர்களுடன் மோடி கலந்துரையாட உள்ளார்.
சர்வதேச அளவில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் சூழல்.. உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் கப்பல் போக்குவரத்தை பாதித்திருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த மாநாட்டில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது கச்சா எண்ணெய் இறக்குமதியை நிலைப்படுத்துவது குறித்து மோடி, புதினுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து நாம் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திருக்கிறோம். மட்டுமல்லாது தற்போது ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதால்.. ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதை சரி செய்ய நாம் ரஷ்யாவுக்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்த இறக்குமதி, ஏற்றுமதி இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் இரு நாடுகளின் அடுத்தக்கட்ட வர்த்தகம், முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக பேசப்படும்.
இது ஒருபுறம் எனில், மறுபுறம் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் மோடி சந்தித்து பேச இருக்கிறார். கடந்த ஆண்டு SCO மாநாட்டில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அதன் பின்னர் இப்போதுதான் சந்திக்க இருக்கின்றனர். இரு நாட்டு எல்லை பிரச்சனை குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும். ஏற்கெனவே இருக்கும் எல்லை பிரச்சனை குறித்து இந்த சந்திப்பில் முடிவெடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதில் இன்னொரு விஷயம் என்னவெனில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார் என்பதுதான். மாநாட்டின் இடையே இவரையும் மோடி தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஈரான் ஒன்னும் லேசுபட்ட ஆள் கிடையாது. கச்சா எண்ணெய் வளம் நிறைந்த நாடு. அந்நாட்டுடன் நட்பு வைத்துக்கொள்வது, அதை வளர்த்துக்கொள்வது இந்தியாவுக்குதான் லாபம் தரும். இப்போதைக்கு நமக்கு கச்சா எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து வந்தாலும், காலகாலத்துக்கும் ரஷ்யாவை மட்டுமே நாம் நம்பியிருக்க முடியாது.
அந்த வகையில் SCO மாநாட்டில் இந்தியா பங்கேற்பது ரொம்பவும் முக்கியமான விஷயமாகும். ஏற்கெனவே இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் வலுவாக இருக்கின்றன. அமெரிக்க டாலைரை தவிர்த்துவிட்டு சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய இந்த நாடுகள் தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றன. அப்படி இருக்கையில், SCO மாநாட்டிலும் இதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

