International
oi-Vignesh Selvaraj
நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று உரையாற்றி உள்ளார். அமெரிக்காவில் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்திருந்ததால் சர்ச்சை எழுந்திருந்தது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இன்று நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் மோகன் பகவத்
‘யுனிவர்சல் ஒன்னெஸ் செலப்ரேஷன்’ (Universal Oneness Celebration) என்ற தலைப்பிலான இந்த நிகழ்வை, அமெரிக்கன் ஹிந்துஸ் ஃபார் என்கேஜ்மென்ட் அண்ட் டயலாக் (AHEAD) அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வை அந்த அமைப்பு “ஒரு மைல்கல் ரக்ஷா பந்தன் கூட்டம்” என்று வர்ணித்துள்ளது.
சர்வதேச மத சுதந்திர அமைப்பு எதிர்ப்பு
முன்னதாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் (USCIRF) என்றழைக்கப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்குமாறு சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
நியூயார்க் மேயர் எதிர்ப்பு
மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மாநகராட்சியின் மேயர் ஜோஹ்ரன் மம்தானியும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அவர், “ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தங்கள் பிரிவினையைத் தூண்டுபவை, எனவே இந்த நிகழ்ச்சியை நான் எதிர்க்கிறேன். ஆனால் இது ஒரு தனியார் அரங்கில் நடைபெறுவதால், இதை ரத்து செய்ய நகராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை” எனத் தெரிவித்தார்.
நியூயார்க் மேயர் மம்தானியின் கருத்துகளுக்குப் பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் மம்தானியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மோகன் பகவத் பேச்சு
இந்நிலையில் இன்று நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “நான் ஒரு சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தேன். அங்கே முஸ்லிம் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்: ‘நீங்கள் ஒரு இந்து அமைப்பு, இந்து ராஷ்டிரம் என்கிறீர்கள், எங்களைப் போன்ற முஸ்லிம்களைப் பற்றி என்ன? எங்களை வெளியேற்றிவிடுவீர்களா?’ என்று கேட்டார்கள்.
நான் சொன்னேன், இல்லை, அது இந்துத்துவா அல்ல.பாரதத்தில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்த இந்து நினைத்தாலும், அவன் இந்துவாக இருக்க மாட்டான். நீங்கள் உங்களை இந்து என்று அழைத்துக்கொள்ள விரும்பினால், எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன என்று நீங்கள் நம்ப வேண்டும். மனிதர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை.
முஸ்லீம்கள் என்று பார்க்கவில்லை
நமது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் எல்லா இடங்களிலும் சேவை செய்கிறார்கள். பாரதத்தின் ஒரு பகுதியான ஹரியானாவில், தாத்ரி என்ற இடத்தின் மேல் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. பயணிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். நமது ஸ்வயம்சேவகர்கள் முதலில் அங்கு சென்றடைந்தனர். அவர்கள், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததோடு, இறந்தவர்களின் உடல்களை மீட்டு, இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து சேவை செய்தனர். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், இவர்கள் முஸ்லிம்கள் என்று அந்த நேரத்தில் ஒருபோதும் நினைக்கவில்லை” என்று பேசியுள்ளார்.

