International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் மலை பகுதியில் ஏரி உடைந்திருப்பதால் மற்றொரு வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதாக நேபாள போலீசார் எச்சரித்துள்ளனர்.
மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு போக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த புதிய எச்சரிக்கையால் நேபாளத்தில் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

புதிய எச்சரிக்கை
இது குறித்து நேபாள போலீசார் கூறியிருப்பதாவது, “நேபாள ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் திபெத் பகுதியில் ஏரி உடையும் அபாயம் இருப்பதால், மீட்பு பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை கொடுத்திருக்கிறோம்.
நேற்று முன்தினம் நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக தற்காலிக ஏரி உருவாகி, உடனே அது உடைந்தது. இந்த உடைப்புதான் 20 கி.மீ தூரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்தால் திபெத் பகுதியில் மற்றொரு ஏரி தற்போது நிரம்பி வழிய தொடங்கியிருக்கிறது. எனவே இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாக மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இமயமலை பகுதியில்தான் நேபாளம் இருக்கிறது. இங்கு பனிப்பாறைகள் உருகுவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக தற்போது பனிப்பாறைகள் வேகமாக உருக தொடங்கியிருக்கின்றன. இதுதான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



