பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து எதிரொலி: மெட்ரோ ரயில் திட்டமும் கைவிட்டு போகிறது..!!
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதால் சென்னை மெட்ரோ ரயில் திட்டமும் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆய்வு பணிகள் முடிந்து விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசு சார்பாகவும் அனுமதி வழங்கப்பட்டது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விஜய் தலைமையிலான அரசு அமைந்தது.இந்த சூழலில் தான் முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாகவும் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க மாற்று இடம் தேடுவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டமும் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரே ரயில் திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மொத்தம் 52.94 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான மொத்த மதிப்பீடு 15,906 கோடி. முதல் கட்டமாக பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரையிலும் பின் சுங்குவார்ச்சத்திரம் முதல் பரந்தூர் வரையிலும் மெட்ரோ பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பரந்தூர் விமான நிலைய பயணிகளுக்கு மட்டுமின்றி, மேற்கு சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய தொழில் பகுதிகளுக்கும் இந்த மெட்ரோ சேவை பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. விமான நிலைய பயணிகளின் போக்குவரத்து தேவையையும் கருத்தில் கொண்டு பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவையை அமைக்கும் திட்டம் முக்கியத்துவம் பெற்றது.
ஆனால் விஜய் அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதால் , சுங்குவார்சத்திரம் முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ பாதை திட்டத்துக்கான தேவை நீர்த்து போனதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் மத்திய அரசு , விமான நிலையம் இல்லாத பகுதிக்கு எந்த அடிபடையில பரிசீலிக்கும் எனவும் கேள்வி எழுந்துள்ளது.
இதனால் பரந்தூர் மெட்ரோ திட்டமும் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்திற்கே கிட்டதட்ட 15 மாதங்களாக ஒப்புதல் கிடைக்காமல் உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதால், இதற்கு வாய்ப்பி மிக குறைவு எனவே திட்டத்தை கைவிடுவது தான் நல்ல முடிவு என அரசு கருதுகிறதாம்.

