கோலாலம்பூர்:
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லோரியைத் தவிர்க்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் மூன்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 5:00 மணியளவில், வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையின் 177.6-ஆவது கிலோமீட்டரில் (வடக்கு நோக்கிய பகுதி), மலாக்காவில் உள்ள ஜாசின் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்னால் சென்ற லோரி திடீரென வேகத்தைக் குறைத்த போது, 31 வயது பேருந்து ஓட்டுநர் லோரியின் மீது மோதாமல் இருக்க அதைத் தவிர்க்க முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்தது.
பேருந்தில் மொத்தம் 11 பயணிகள் இருந்ததாக ஜாசின் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் லீ ராபர்ட் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் (62) தலையில் காயமடைந்தார், பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணிற்கு (46) தலையில் காயமும் மலேசியச் சுற்றுலா வழிகாட்டிக்கு (59) காலில் காயமும் ஏற்பட்டது.
பேருந்தில் இருந்த மற்ற 8 பயணிகளும் 31 வயதுடைய பேருந்து ஓட்டுநரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.
பேருந்து ஓட்டுநருக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



