நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆறு அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் போது, நீதித்துறை செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்து கருத்து வெளியிட்டதாக முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் மகிந்த பத்திரன ஆகிய ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தொடரப்படும் வழக்கு
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் உண்மைகளை அறிக்கையாகச் சமர்ப்பித்தனர்.

இதன்படி, அந்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதவான் நீதிமன்றம், குறித்த நபர்களின் கருத்துக்கள் முதல் பார்வையில் நீதித்துறை நடவடிக்கைகளை விமர்சிப்பதாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளின் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

