தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியனான ஜொலானி டெட்டே (37), அவரது வீட்டின் வாசலில் வைத்தே அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
2007-2008 ஆம் ஆண்டுகளில் WBF பிளைவெயிட் உலக சாம்பியன் பட்டத்தையும், 2017 முதல் 2019 வரை WBO பேண்டம்வெயிட் உலக சாம்பியன் பட்டத்தையும் ஜொலானி டெட்டே வென்றுள்ளார்.
2017-ல் சிபோனிசோ கொன்யா என்பவரை எதிர்கொண்ட போட்டியில், வெறும் 11 வினாடிகளிலேயே அவரை வீழ்த்தி உலக தரத்திலான போட்டிகளில் மிக வேகமான நாக் அவுட் வெற்றியைப் பதிவு செய்து கின்னஸ் சாதனையும் படைத்திருந்தார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து தென்ஆப்பிரிக்க விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவிக்கையில், ஈஸ்டர்ன் கேப் நகரில் உள்ள டான்ட்சேன் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு டெட்டே காரில் திரும்பியுள்ளார்.
Image Credit: WBO
வீட்டு வாயிலின் கதவு திறப்பதற்காகக் காரில் காத்திருந்தபோது, முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரை நோக்கித் தொடர்ச்சியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த டெட்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய இளம்பெண்ணும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டிற்குப் பெருமை சேர்த்த சிறந்த விளையாட்டு வீரரை இழந்துவிட்டதாகக் கூறி அமைச்சர் தனது ஆழ்ந்த கண்டனத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
