ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள லிட்டில் கார்டன் தனியார் பாடசாலையில், வீட்டுப்பாடத்தை முடிக்காத காரணத்தினால் 6 வயது மாணவன் பிரணய் தேஜா, ஆசிரியரால் கன்னத்தில் அறையப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கம்போல உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்ற அந்தச் சிறுவன், வீட்டுப்பாடத்தைச் செய்யவில்லை என்ற காரணத்தினால் ஆசிரியரால் தாக்கப்பட்டபோது அதிர்ச்சியும் பயமும் அடைந்து மயங்கிச் சரிந்து விழுந்துள்ளான்.
உடனடியாகப் பாடசாலை ஊழியர்களால் கிங் ஜார்ஜ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அங்குச் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சிறுவனின் தந்தை, தனது மகன் எவ்வித உடல்நலப் பிரச்சினைகளும் இன்றி ஆரோக்கியமாகவே பள்ளிக்குச் சென்றதாகவும், சிசிடிவி காட்சிகளில் ஆசிரியை சிறுவனைப் பயமுறுத்தி கன்னத்தில் அறைந்தமை பதிவாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பாடசாலையிலிருந்து தமக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும், வேறு சில குழந்தைகளும் அங்குத் தண்டனைகளுக்கு உள்ளாவதாகவும் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் வருவாய் கோட்ட அதிகாரி திலீப் சக்கரவர்த்தி வைத்தியசாலைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதோடு, சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

