புது கார் வாங்க போறீங்களா? செப்டம்பர் 1 முதல் இந்த கார்களோட விலை எல்லாம் ஏறப்போகுது..!!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கார் வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரங்களில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் சொந்தமாக கார் வைத்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார் விற்பனை அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
கார் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரிய ஒரு சந்தை. அதுவும் கடந்த ஆண்டு மத்திய அரசு கார்களுக்கான ஜிஎஸ்டியை குறைத்ததால் கார்களின் விலை குறைந்ததால் ஏராளமான மக்கள் போட்டி போட்டு கொண்டு கார்களை வாங்கினர். அதுமட்டுமில்லாமல் வங்கி கடன்களும் இப்போது எளிதாக கிடைக்கின்றன என்பதால் ஏராளமான மக்கள் ஆர்வமாக கார் வாங்குவதை காண முடிகிறது.

இந்நிலையில் பல்வேறு கார் விற்பனை நிறுவனங்களும் செப்டம்பர் 1 முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. எனவே கார் வாங்கும் திட்டத்தில் இருப்பவர்கள் இந்த 31ஆம் தேதிக்குள் வாங்கினால் பல ஆயிரங்களை மிச்சப்படுத்த முடியும்.
இந்தியாவில் கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வது காரணமாக முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வு பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய எரிபொருள் வாகனங்களுக்கும் மற்றும் மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டுகளுக்கு ஏற்ப விலை உயர்வின் அளவு மாறுபடும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு சரியான மதிப்பை வழங்குவதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொடர் பணவீக்க அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளில் பெரும்பகுதியை நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே தற்போது வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதாகவும் டாடா மோட்டார்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகனங்களின் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. முதலில் கடந்த ஏப்ரல் 1 அன்று, பெட்ரோல்/டீசல் வாகனங்களின் விலையை சராசரியாக 0.5 சதவீதம் உயர்த்தியது. கடந்த ஜூலை 1 அன்று, பெட்ரோல்/டீசல் மற்றும் மின்சார வாகனங்கள் அனைத்திற்கும் 1.5 சதவீதம் வரை விலை உயர்த்தியது. தற்போது செப்டம்பர் 1 முதல் 25,000 வரை விலை உயர்த்தப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் Tiago, Altroz, Tigor, Punch, Nexon, Curvv உள்ளிட்ட பெட்ரோல் வாகனங்களுக்கும், அனைத்து மின்சார வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். டாடா மோட்டார்ஸ் மட்டுமல்லாமல், நாட்டின் மற்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன.
மாருதி சுசூகி தனது போர்ட்ஃபோலியோ கார்களின் விலையை ஆகஸ்ட் மாதத்தில் 2,500 முதல் 30,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா செப்டம்பர் மாதம் முதல் தனது கார்களின் விலையை 1 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
எனவே செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பாக டாடா, ஹூண்டாய் கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் பழைய விலையிலேயே கார்களை பெற முடியும், எனவே கார் வாங்கும் திட்டம் இருந்தால் உடனே புக் செய்தால் நல்லது. அடுத்த மாதம் தள்ளி போட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

