ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வடகொரியாவிலிருந்து மேலும் 8500 இராணுவ வீரர்கள் கொண்ட புதிய படைப்பிரிவு ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் வடிம் ஸ்கிபிட்ஸ்கி (Vadym Skibitskyi) இதனை தெரிவித்துள்ளார்.
இந்த புதிய படையில் உக்ரைன் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட 400 ட்ரோன் இயக்குநர்கள் (Drone Operators) சேர்க்கப்பட்டிருப்பது உக்ரைனுக்குப் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய வீரர்கள்
ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டு வரும் நிலையில் ட்ரோன்களை இயக்கும் சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்கள் அதிகாரப்பூர்வமாக இந்த அலைவீச்சில் சேர்க்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இவர்களது ட்ரோன்கள் உக்ரைன் எல்லைக்குள் உளவு பார்க்கவும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படலாம் என உக்ரைன் எச்சரித்துள்ளது.

புதிதாக வந்துள்ள வடகொரியப் படைகள் பெரும்பாலானவை ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதில் 1,000 பொறியாளர்கள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்களும் (Engineers and Deminers) அடங்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வடகொரிய வீரர்கள் உக்ரைனிய எல்லைக்குள்ளே நேரடியாகப் போரிடாமல், ரஷ்யாவின் பின்பகுதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவார்கள் என்றும் இதன் மூலம் கூடுதல் ரஷ்ய வீரர்களை உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வடகொரிய வல்லுநர்கள்
செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் சந்திப்பின் போது மேலும் 50,000 வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷ்யா கோரிக்கை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகொரியா இதுவரை ரஷ்யாவிற்கு 150-க்கும் மேற்பட்ட KN-23 மற்றும் KN-24 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாகவும் மேலும் 120 ஏவுகணைகளை வழங்க உறுதியளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏவுகணைகளை இயக்குவதற்கு உதவ வொரோனேஷ் (Voronezh) பகுதிக்கு சுமார் 90 வடகொரிய வல்லுநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆட்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குவதற்குப் பதிலாக ரஷ்யாவின் சக்திவாய்ந்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பைத் தருமாறு வடகொரியா கோரியுள்ளதுடன் ஏற்கனவே Pantsir-S1 அமைப்பைப் பெற்றுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிம் ஜோங் உன்னைக் கோபப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தென்கொரியாவுடனான கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளைக் குறைப்பதாக அறிவித்திருந்த நிலையில் ரஷ்யா – வடகொரியா இடையிலான இந்த தீவிர இராணுவ ஒத்துழைப்பு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

