International
oi-Nantha Kumar R
மொகாடிசு: துருக்கியில் இருந்து சோமாலியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றி சென்ற கப்பல் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற கப்பல் என்று 2 கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இதில் துருக்கியில் இருந்து புறப்பட்ட ஆயுத கப்பலில் 6 இந்தியர்கள் பயணித்த நிலையில் அவர்களின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில் கடத்தல் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கியும், சோமாலியாவும் நல்ல நட்பு நாடுகளாக உள்ளன. துருக்கி சார்பில் சோமாலியாவிற்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள், உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சோமாலியாவில் பல்வேறு கிளர்ச்சி படைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கிளர்ச்சி படைகளை சமாளிக்க சோமாலியாவின் முப்படை வீரர்களுக்கும் துருக்கி சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவில் துருக்கி தனி ராணுவ பயிற்சி மையத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் துருக்கி நாட்டில் இருந்து சோமாலியா தலைநகர் மொகாடிசுவிற்கு கேமரூன் நாட்டு கொடியுடன் M/V LUTUF சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. இந்த கப்பலில் 6 இந்தியர்கள் உள்பட மொத்தம் 10 பேர் இருந்தனர். இந்த கப்பலில் மெகாடிசு நகரில் துருக்கி நடத்தும் ராணுவ பயிற்சி மையத்தின் பயிற்சிக்கு தேவையான ஆயுதங்கள், செயற்கைகோள் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் எடுத்து செல்லப்பட்டன்.
இந்த கப்பல் சோமாலியாவின் புட்லன்ட் எல் மாவட்த்தில் உள்ள மராயாவில் இருந்து மூன்றரை நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் பயணித்தது. அப்போது 8 கடற்கொள்ளையர்கள் ஊழியர்களை சிறைபிடித்து கப்பலை கடத்தி சென்றனர். இந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் நுகால் கடற்கரையை நோக்கி எடுத்து சென்றனர். இந்த கப்பலில் பயணித்த 6 இந்தியர்கள் உள்பட 10 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. கப்பலை கண்டுபிடிக்கும் பணியில் துருக்கி தீவிரமாக இறங்கி உள்ளது.
அதேபோல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்ரியாவின் கொடியுடன் SIBU 1 என்ற கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றி கொண்டு பயணித்தது. இது ஈரானின் நிழல் கப்பல் என்று சொல்லப்படுகிறது. ஈரானில் இருந்து இந்த கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றி உலகம் முழுவதும் சப்ளை செய்து வருகிறது. குறிப்பாக இந்த கப்பல் ஈரான் ஆதரவில் ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹவுதிகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்து வருகிறது. இந்நிலையில் தான் ஏமன் நாட்டில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இஷா என்ற துறைமுகம் நோக்கி கப்பல் கப்பல் பயணித்தது.
இந்த கச்சா எண்ணெய கப்பலை 7 கடற்கொள்ளையர்கள் கடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் 2 கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.
முன்னதாக இந்த ஆண்டின் முதல் 5 மாதத்தில் சோமாலியா கடலில் மட்டும் கடற்கொள்ளையர்களால் 3 வணிக கப்பல்கள், 5 Dhow கப்பல்கள் கடத்தப்பட்டன. தற்போது ஒரு ஆயுத கப்பல், கச்சா எண்ணெய் கடத்தப்பட்டுள்ளது. இதனால் சோமாலியாவை சுற்றிய கடல்வழிப்பாதையில் கப்பல்கள் பயத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

