ரூ.2000க்கு மேல் GPay செய்தால் கட்டணம்..!! 2 வாரங்களில் MDR நடைமுறை? சாதாரண மக்களும் செலுத்தனுமா?
கோடிக்கணக்கான இந்தியர்களால் ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தப்படும் யுபிஐ நடைமுறையில் ஒரு முக்கியமான மாற்றம் அமலுக்கு வர இருக்கிறது. ஜிபே, போன்பே, பேடிஎம், பீம் போன்ற யுபிஐ செயலிகள் மூலமாகவே நாம் ஏராளமான பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறோம்.
சிறிய பூக்கடைக்கு செல்வது தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கான ஷாப்பிங் வரை நாம் அனைத்து தேவைகளுக்கும் யுபிஐ மூலமே கட்டணம் செலுத்துகிறோம். இந்த யுபிஐ கட்டமைப்புக்கு பொதுமக்களோ வணிகர்களோ எந்த ஒரு கட்டணமும் செலுத்துவதில்லை. இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவுகளை அரசே ஏற்கிறது.

இந்நிலையில் 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம் விதிக்கும் முறை நடைமுறைக்கு வர உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் MDR எனப்படும் வர்த்தக கட்டண அறிவிப்பு வெளியாகும் என மணி கண்ட்ரோல் செய்தி கூறுகிறது. இதன்படி, 2,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை கொண்ட வணிக ரீதியான (Merchant) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விரைவில் Merchant Discount Rate – MDR கட்டணம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நிதி சேவைகள் துறை விரைவில் ஒரு அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாம். இதில் எத்தகைய கட்டணங்களுக்கு எவ்வளவு எம்டிஆர் வசூலிக்கப்படும், எவற்றுக்கு எல்லாம் விலக்கு அளிக்கப்படும் என்ற தகவல்கள் இடம்பெறும். முதலில் அரசாணை வெளியிடப்பட்டு பின்னர் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தலைமையிலான சேவை கட்டுப்பாட்டு குழு கட்டண விகிதங்கள் மற்றும் கட்டமைப்பை வெளியிடும்.
இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும், சாதாரண மக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எத்தகைய பாதிப்பும் இருக்காது. ஏனெனில் தனிநபர்களுக்கு இடையேயான பணப்பரிமாற்றங்கள் மற்றும் குறைந்த மதிப்புடைய சில்லறை பரிவர்த்தனைகள் எப்போதும் போல் முற்றிலும் இலவசமாகவே தொடரும். எனவே பொதுமக்கள் இதனால் நமக்கு கூடுதல் செலவோ என அஞ்ச வேண்டாம், இந்த கட்டணம் பெரு வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே மக்களவையில் இது குறித்து விளக்கம் தந்துவிட்டார். அதில் வணிகர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் எம்டிஆர் கட்டணங்களை நுகர்வோர் மீது திணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே வாடிக்கையாளர்கள் இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. எப்போதும் போல இலவசமாகவே யுபிஐ தொடர்ந்து பயன்படுத்தலாம் என விளக்கம் தந்திருந்தார்.
2,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையுடன் வணிக நிறுவனங்களுக்கு செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த எம்டிஆர் கட்டணம் பொருந்தும் வகையில் விதிகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பு மற்றும் இணைய பாதுகாப்பு முறைகள் மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டணம் நடைமுறைக்கு வந்தாலும் வாடிக்கையாளர் மீது திணிக்காத வகையில் விதிமுறைகள் உருவாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் யுபிஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்கான கட்டமைப்பை நவீனப்படுத்தவும் பராமரிக்கவும் ஆகும் செலவினை யாரேனும் ஏற்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூறி வருகிறது.
