Social Media Score Card: அமைச்சர்களிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்!! எல்லாம் Gen Z படுத்தும் பாடு!!
உலகமே தற்போது Gen Z தலைமுறையிடம் தான் உள்ளது. அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் ஒரு நாட்டின் ஆட்சியையே கவிழ்க்க முடியும் என்பதை உலகம் முழுவதும் நிரூபித்து வருகிறார்கள். 1997ஆம் ஆண்டில் இருந்து 2012 வரை பிறந்தவர்களை ஜென் ஸீ என அழைக்கிறார்கள்.
தேர்தலில் வாக்களிப்பது, வேலை வாய்ப்பு சந்தை என அனைத்துமே இவர்கள் கையில் தான் உள்ளது. எனவே அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் Gen Z இளைஞர்களை கவர வேண்டும். எனவே பாஜக தற்போது அந்த வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இதற்காகவே இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்படுகிறார்.

மத்திய அரசால் அமல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சாதனைகளை ஜென் ஸீ எனப்படும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க மத்திய அரசு புதிய விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கை (Social Media Scorecard) தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்கள் மூலமாக அரசின் நலத்திட்டங்களை எந்த அளவுக்கு அமைச்சர்கள் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர் என்பது குறித்து தயாரித்து வைக்கப்பட்டிருந்த விரிவான மதிப்பீட்டு அட்டை ஒவ்வொரு அமைச்சருக்கும் வழங்கப்பட்டதாம்.
கடந்த மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்தில் அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் சமூக வலைதளங்களில் அமைச்சர்கள் வெளியிடும் பதிவுகள், ஒரு நாளைக்கு எத்தனை பதிவுகள் வெளியாகின்றன, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பகிர்கிறார்களா, அமைச்சர்களின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவுகளுக்கு கிடைத்த லைக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட்இன் ஆகிய சமூக வலைதளங்களில் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதள செயல்பாடுகளில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் டிஜிட்டல் தளங்களில் அமைச்சர்கள் எப்படி பயன்படுத்துவது என அறிவுரைகள் வழங்கப்பட்டதாம்.
மேலும் இந்த Gen Z திட்டத்தின் மற்றொரு முக்கிய முடிவாக, தினமும் ஒரு மத்திய அமைச்சர் ஒரு பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுவார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் பல்வேறு துறைகளில் எட்டப்பட்ட சாதனைகள் குறித்து மாணவர்களிடம் அமைச்சர்கள் எடுத்துரைக்க வேண்டும், அதே நேரத்தில், நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினைகள் குறித்து மாணவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழக பயணங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் முதன்முறை வாக்காளர்களாக மாறவுள்ள இளம் தலைமுறையினரை ஈர்ப்பதே இதன் நோக்கம்.
தற்போது 14 முதல் 15 வயதில் இருக்கும் ஜென் ஸீ இளைஞர்கள், வரும் 2029-30 ஆம் ஆண்டுகளில் 18 முதல் 19 வயதை அடைந்து முதன்முறை வாக்காளர்களாக மாறுவார்கள். எனவே, அவர்களுக்கு அரசின் செயல்பாடுகளை இப்போது இருந்தே புரிய வைப்பது அவசியம் என பாஜக கருதுகிறதாம்.அண்மையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு சார்பாக நீட் எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இதில் ஜென் ஸீ இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர். எனவே தான் இனி இவர்களே எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் செயல்பட தொடங்கிவிட்டன.

